Friday, August 9, 2013

வன்னி மக்களின் பொருளாதார மேம்பாடும் பொருளாதார மீட்சியும்

வன்னிப் பெருநிலப்பரப்பில் 600 கோடி ரூபா முதலீட்டில் பாரிய விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திட்டமிடல் செயற்பாடுகள்  மிகத்துரிதமாக   இலங்கை   அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வரவேற்கப்பட  வேண்டிய இத்திட்டம் அரசியல்வாதியான பசில் ராஐபக்ச தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.

அதேவேளை அரசியல் பலவீனத் தள நிலையிலிருக்கும் தமிழ்மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்ற கேள்வியை சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். ஏதோ ஒருவகையில் நிறைவேறப்போகின்ற இத்திட்டத்தை எவ்வாறு எம்மக்களுக்குச் சாதகமாக மாற்றுவது, அரசியல் ரீதியாக வரக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பிரதான விடயங்களில் உள்ளுர், புலம்பெயர் முதலீட்டார்களும் புலமைசார்வல்லுனர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பது வன்னி விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பு.

விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக சாத்தியகூற்று ஆய்வினை மேற்கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளின் குழு கடந்தவாரம் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. ஒரு துறைசார் திட்டமிடலுக்கான இக்குழு, நாட்டின் அரசியல் மற்றும் அதிகார உயர்மட்டங்களுடனான சந்திப்பினை மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றது. இச்செயற்பாடு, விவசாய மேம்பாட்டுதிட்டத்தில் அரசாங்கத்தின் அபிலாஷைகளே பிரதானமாக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவினையே தருவதாக அமைந்துள்ளது. ஏனெனில், ஏற்கனவே மகாவலித்திட்டத்தினூடாக வன்னியில் பாரிய சிங்களக்குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற இலங்கை அரசின் நீண்டநாள் கனவுக்கோவை மீளத் தூசுதட்டப்பட்டு, சர்வதேச உதவியுடன் புத்துயிர் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் மேலோங்கியிருப்பதையே இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

ஒரு நாட்டின் அதிகார வர்க்கம் என்பது அந்நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற, நிர்வகிக்கின்ற வலு (Power) கட்டமைப்பே தவிர அடிப்படைத்துறைக்கான அமைப்பு அன்று. ஒரு துறைக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, துறைசார் நிபுணர்களாலோ அதற்கென உருவாக்கப்பட்ட குழுவினாலோ முதலில் சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையில் தேவை மதிப்பீடு, திட்டமிடல், திட்டமதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையில் இறுதியாக அதிகாரபீடங்களின் பங்கு உள்வாங்கப்பட வேண்டும். மக்களுக்கான அபிவிருத்தியில் வகுக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிகாரவர்க்கத்தின் அனுமதி தேவையே தவிர, அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளுக்கு அமைவாகத் திட்டங்கள் வகுக்கப்படுவதில்லை. அது ஒரு மேம்பாட்டுத் திட்டமும் இல்லை. இங்கு வல்லுனர் குழுவால் தீட்டப்பட்டது இரண்டாவது வகை.

அதேவேளை திட்டமிடல் தொடர்பாக இரண்டு பிரதான கேள்விகள் எழுகின்றன. ஒன்று திட்டமிடலுக்காக வந்த இந்திய விஞ்ஞானிகள் குழுவின் சாத்தியவியல் ஆய்வுதொடர்பானதாகும். ஏனெனில் துறைசார் திட்டமிடலின் சாத்தியக்கூற்று ஆய்வு என்பது குறிப்பிட்ட பிரதேசத்தை மையப்படுத்தியதாக அமையும்போது, களநிலை ஆய்வு (Field Assessment) முதன்மைப்படுத்தப்படுகின்றது. குறைந்தது அப்பிரதேசத்தின் துறைசார் அறிவடையோர், நீண்டகாலம் அத்துறையில் பணியாற்றியவர்கள் தகவல் வழங்குபவராக உள்வாங்கப்பட வேண்டும். இதில் எந்தவொரு முறையும் இக்குழுவால் பின்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு விவசாய வலயமும் வெவ்வேறுபட்ட தன்மையைக்கொண்டது. பொதுப்படையான எடுகோள்கள் பொருத்தமற்றவை. அதேவேளை இலங்கை அரசினால் பேணப்பட்டு வரும் வன்னி மண்ணின் பெரும்பாலான புள்ளி விவரங்கள் இருபது ஆண்டுகளுக்கு முற்பட்டவை. எனவே சாத்திய ஆய்வுக்காக எவ்வாறான தகவல்கள், எவ்வாறு திரட்டப்பட்டன என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அடுத்து, ஒரு பிரதேசத்தினது அடிப்படைப' பொருளாதாரத் திட்டமிடலில், அப்பிரதேசத்தின் மக்களது பங்கேற்பு (participation) ஒரு முக்கியமான காரணியாக அமைகின்றது. இன்றைய உலகின் பொருண்மிய மேம்பாட்டுக்கான அடிப்படை உத்தியும் அதுவே. ஏனெனில் ஒரு பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவனுக்கே அப்பிரதேசத்தின் ஒவ்வோர் அணுவும் அதன் அமைப்பும் நன்கு தெரியும். பிரதேச அறிவு (Local Knowledge) என வரையறுக்கப்படும் இக்காரணியை உள்வாங்கிக் கொள்ளாத திட்டமிடல், வெற்றியின் சாத்தியங்களைக் குறைப்பதுடன் சிலசமயம் எதிர்மறையான விளைவுகளையும் கொடுக்கின்றது.

ஒரு சிறிய உதாரணம், 2005 ம் வருடம் ஒரு தொண்டு நிறுவனம் பூநகரியில் வேளாண் மேம்பாட்டுத்திட்டம் ஒன்றை மிகப்பெரியளவில் முன்னெடுத்தது. இத்திட்டம் முற்றுமுழுதாக வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட விவசாய விஞ்ஞானிகள், துறைசார் வல்லுனர்களினால் தயாரிக்கப்பட்டது. பரந்த வயல் வெளியில் பயிர்ச்செய்கை ஆரம்பமானது. அதற்காக வயல் வெளியை சுற்றியிருந்த பற்றைகள் பாரிய இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் - "அந்தப் பற்றைகளை அகற்ற வேண்டாம். இங்கிருக்கும் பற்றைகள் அகற்றப்பட்டால் இந்த தொடர் வயல் வெளியில் எவ்வித பயிர்செய்கையும் மேற்கொள்ள முடியாது” என வலியுறுத்தினார். ஆனால் வல்லுனர்களில் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளாததுடன் அவரின் வாதம் அர்த்தமற்றது எனவும் தெரிவித்தனர். மேலும் விஞ்ஞான ரீதியாக தமது திட்டம் பலமானது என வாதிட்டனர். இறுதியில் வல்லுனர்களின் திட்டப்படி எந்தப்பயிரும் அவ்விடத்தில் செய்ய முடியவில்லை. பயிர் முளைவிடும்போதே கருகியது. காரணம் அருகிலிருந்த நீரேரியில் இருந்து வந்த உப்புக்காற்றின் தாக்கமே. பற்றைகளால் சூழப்பட்டிருந்தபோது காற்று வருவது தடுக்கப்பட்டது என்பது பின்னர் வல்லுனர்களால் கண்டறியப்பட்டது. இதையே பெரியவர் தனது அனுபவத்தின் மூலம் கூறியிருந்தார்.

இதேபோல, காலம் காலமாக வன்னி மண்ணின் விவசாயத்தை வளர்த்துவரும் அந்த மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களின் எவ்விதமான பங்கேற்பும் இன்றி பிரதேசத்திற்கான திட்டம் தயாரிக்கப்படுகின்றது.

எனவே முறையான சாத்தியவியல் ஆய்வு இங்கு முதன்மைப்படுத்தப்படவில்லை. மாறாக வன்னியின் விவசாயத்தில் இந்திய முதலீட்டுக்கான சாத்திய ஆய்வே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் தொழில்நுட்பம், உபகரணங்கள், வேளாண் விதைகள், உரங்கள் இலங்கையால் கோரப்பட்டுள்ளன. இந்தியாவால் வழங்கப்படவுள்ள 600 கோடி ரூபா கடனில் ஒரு பகுதியாக இதனை (பொருட்களாக) வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தேவை மதிப்பீட்டு அடிப்படையில் கோரப்படவில்லை. இதிலிருந்து வன்னியின் விவசாயத்துறையில் இந்தியாவின் கேள்விச்சந்தை தேடப்படுவது தெளிவாகத் தெரிகின்றது.

பொருளாதார ரீதியாக நோக்குவோமாக இருந்தால் வன்னியின் விவசாய உற்பத்தியானது, வடபகுதியின் முழுக்கேள்வியையும் பூர்த்திசெய்யக்கூடியது மட்டுமல்லாமல் ஏற்றுமதியையும் செய்யக்கூடிய வளங்களைக்கொண்ட துறையாக விளங்குகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலத்தடிநீர் மாசுபாடு, நீருக்கான தட்டுப்பாடு மற்றும் விவசாயநிலங்கள் குடியிருப்பிடங்களாக மாற்றப்படுதல் போன்றவற்றால், உள்ளுர் விவசாய உற்பத்தி அம்மக்களின் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யமுடியாத நிலையிலுள்ளது. இச்சூழலில் யாழ்ப்பாணத்திற்கான கேள்விச்சந்தை வன்னி விவசாயத்திலேயே முழுமையாக சார்ந்திருக்கவேண்டியுள்ளது. இது வன்னி விவசாயசத்துறையின் கேள்விச்சந்தையினை மேலும் விஸ்தரிக்கக்கூடிய வாய்ப்புக்களை அதிகரிக்கின்றது. இப்புறநிலைகள் சிங்களக் கொள்கைவகுப்பாளரின் சிந்தனையை இங்கு மையங்கொள்ளச் செய்ததில் வியப்பில்லை.

இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருந்தபோதிலும் எந்த ஒரு காலகட்டத்திலும் வன்னியின் விவசாயத்துறையில் இலங்கை அரசினாலோ வேறு எந்த அபிவிருத்திப் பங்காளிகளினாலோ நெறிப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத்திட்டங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக சமாதானம் என்று சொல்லப்பட்ட காலப்பகுதியில் வன்னியின் விவசாயத்துறை மேம்பாட்டில் உலகவங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முறையாகக் கையாளப்படவில்லை. நவீன மயப்படுத்தப்பட்ட விவசாயமுறை நீண்டகால பொருளாதரத்தடையால் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அதேபோல் சமாதான காலத்தில் வன்னியின் விவசாயிகளை கதிகலங்க வைக்கக்கூடியளவில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் கேள்விச்சந்தைகள் தெற்கிலிருந்து குறிப்பாக தம்புல்ல போன்ற இடங்களிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டதையும், வன்னி விவசாயிகள் எதிர்கொள்ளமுடியாத போட்டிச்சந்தையை உருவாக்கி, வன்னியில் விவசாய மேம்பாட்டை தடுக்கின்ற அணுகுமுறை கையாளப்பட்டதையும் நினைவு கொள்ள வேண்டும்.

நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்டே வந்த வன்னிமக்கள், இறுதிப்போரின் இடப்பெயர்வினால் முழுமையாக எல்லாவற்றையும் இழந்துள்ளனர். மீள்கட்டுமானத் திட்டங்களில் இருந்து புறந்தள்ளப்படுகின்றனர். தற்போது கையேந்து நிலையிலிருக்கும் அவர்களை தூக்கிவிடும் பாரிய கடமை தமிழ் முதலீட்டாளர்களிடமும் புலம்பெயர் சமூகத்திடமும் உள்ளது.

இப்படிப்பட்ட புறநிலைகளில், செயற்படப்போகும் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களை எமது மக்களுக்குச் சாதகமாக்கக்கூடிய சில வழிகள்

Ø உற்பத்தி, உற்பத்தியின் பின்னரான முதலீடு, சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப உட்கட்டுமானம் போன்றன இங்கிருக்கும் முதலீட்டுக்கான வாய்ப்புகள். இதில் உள்ளுர் மற்றும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் முதலிடவேண்டும்.

Ø திட்டமிடலில் உள்ளுர், புலம்பெயர் வல்லுனர்கள் ஏதோ ஒரு வழியில் திட்டம் சரியான முறையில் செல்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து ஆலோனைகளை வழங்க வேண்டும்.
Ø முக்கியமாக வடபகுதி தமிழ்மக்கள் நகர்ப்புறம் சார்ந்து குடியேறும் நிலையை தவிர்த்து, ஒரு நெரிசல் மிக்க வாழ்க்கை முறையிலிருந்து மாறி வன்னிப்பகுதியில் குடியேறலாம். இதன்மூலம் சிறந்த தொழில்வாய்ப்பைப் பெறுவதுடன் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்த முடியும் என்பதற்கு அப்பால், எமது பூர்வீக தாயக நிலம் பறிபோவதைக் காப்பாற்றலாம். இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மக்களை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களுக்கான ஒழுங்குகளையும் செய்வதால் பாரிய சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதுடன் நீண்ட போரின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்தலாம்.
Ø புலம்பெயர் மக்கள் தங்களுக்குத் தெரிந்தவர், உறவினர் மூலமோ அல்லது ஒருகுழுவாக சேர்ந்தோ தங்களால் இயன்ற உற்பத்தி முதலீட்டை நேரடியாக வழங்க முன்வந்தால் சிங்களத்திடம் கையேந்தாமல் விரைவாக தங்குநிலையிலிருந்து தனித்துவமான பொருளாதார நிலைக்கு எமது சமூகம் கௌரவமாக செல்லக்கூடிய வாய்ப்புள்ளது.

Tuesday, August 7, 2012

'பண்ணி'கள் படுத்தும்பாடு

என்னடா பண்ணி மேய்க்கிற பண்ணையில் மேலாளர் வேலைக்குச் சேர்ந்திட்டானோ? என்று நீங்கள் நினைக்கிறது புரியுது. ஆனால் அதுவல்ல இது. எங்களுடைய தாய்த்தமிழ் மொழியில் கூட்டம் கூட்டமாகப் புகுந்து குதறும் 'பண்ணிகள்' பற்றியது. யாரையோ திட்டப்போறான் என்று நினைக்கிறீங்கள். அதுவும் இல்லை.

சரி, இனி விடயத்திற்கு வருகின்றேன். அண்மையில் தூரத்து உறவினர் ஒருவர் இரவு விருந்திற்கு அவரது வீட்டிற்கு வரும்படி அழைத்திருந்தார். அழைப்பைத் தவிர்க்க முடியவில்லை ஆதலினால் போய்விட்டேன். நகரத்திலிருக்கும் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் வீட்டிற்குச் சென்ற என்னை அன்பாக வரவேற்று நீண்டகாலம் பழகியதைப்போல பேசிக்கொண்டிருந்தார்கள்.

நாங்களிருந்து பேசிக்கொண்டிருந்த வீட்டின் மைய அறையின் அருகேயிருந்த அறையில் அவர்களுடைய ஏழு வயது நிரம்பிய மகள் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு சென்ற அவளது அம்மா ' டர்ஷி எல்லாம் கரைக்டா றைட் பண்ணியிட்டியா? (சரியா எழுதியிட்டியா?) முதல்ல கொம்பிளீட்டா றீட் பண்ணிட்டு, (f)பர்பக்டா றைட் பண்ணுங்கோ. அப்படின்னா தான் (f)பெஸ்ட் ராங் கிடைக்கும்' என்று மகளை ஊக்கப்படுத்தினார். நவீன தமிங்கில வார்த்தைகள் சிரமமாகவிருந்தது புரிவதற்கு. மனதுக்குள்.... 'தமிழ் வளர்க' என்று நினைத்தேன்.

சமையல் முடித்ததும் மகளைக் கூப்பிட்டு 'றைட் பண்ணி முடிந்தால் வாங்கோ சீக்கிரம் ஈற் பண்ண வேணும் (அதுதாங்க சாப்பிடுவோம்). என்றார். மகளோ பாவம் தூக்க களைப்பில் சாப்பிட வந்து உட்கார்ந்த போது தாயார் கண்டிப்பாக ஈற் பண்ண முதல்ல கான்ட் வோஸ் பண்ண வேணும் ஓகேயா? சீக்கிரம் வோஸ் பண்ணிட்டு வா என்றார். எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்தோம். பின்னர் மகளிடம் 'பிறஸ் பண்ணிட்டு, பிறே பண்ணிட்டு போய் சீக்கிரம் சிலீப்பண்ணுங்கோ'. எனக்கூறி விட்டு என்னிடம் வந்தார். 'பிள்ளைகளுக்குச் சரியான தமிழ் பழக்க வேணும். ஆங்கிலம் பேச வைக்கக்கூடாது. நான் சரியான கண்டிப்பு, வீட்டில் தமிழ் மட்டும்தான் பேசுவேன்' என்று எனக்கும் தனது கொள்கையைத் தெளிவாக விளக்கினார். திருவள்ளுவருக்குப் பக்கத்தில கண்டிப்பாக உங்களுக்குச் சிலை வைக்கவேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவு தூரம், எமது மொழியை நாங்களே சிதைக்கின்றோம் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. ஆங்கில மொழிக்கலப்பு என்பது சர்வசாதரணமாகிவிட்டது. ஆங்கில மோகத்தின் விளைவால் பிறந்த 'தமிங்கிலம்' தான் நாங்கள் தத்தெடுத்து வைத்திருக்கும் நோய்பிடித்த குழந்தை. இதில் எத்தனையோ தப்புத்தாளங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் 'பண்ணி' எனும் சொல்லின் பிறப்பு. ஆங்கிலச் சொல்லை தமிழில் இணைக்கும் போது பண்ணி என்னும் சொல்லையும் சேர்த்தாலே பேச முடியும். இதன் உருவாக்கம் இப்படி தான் நடந்தது. ஆனால் வேண்டப்படாத இந்தப் பிறப்பு இன்று வேகமாக, ஆழமாக வேரூன்றி விட்டது என்பது மட்டும் உண்மை, பிரிக்க முடியாக ஒரு சொல்லாகத் தமிங்கிலத்தில் இணைத்துக்கொண்டு விட்டது இந்தப் 'பண்ணி'. சாதாரணமாக பண்ணி இன்றி தமிழுடன் ஆங்கிலம் பேச முடியாது.

ஒரு மொழி காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியடையும் இலகுபோக்கில் இருக்க வேண்டும். புதிய சொற்கள் வரவேற்கப்பட வேண்டும் அவை அர்த்தமுள்ளவையாக அமையும் போது. பண்ணி எனும் இச்சொல் தனித்து நின்று செயற்படக்கூடியது அல்ல. பொருள் நிறைந்த ஒரு சொல்லும் அல்ல. ஒரு வெற்றுச் சொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கில வினைச்சொற்கள் தமிழில் வரும்போது 'பண்ணி' இல்லாமல் செயற்பட முடியாது. ஒரு வகையில் சொல்லப்போனால் ஆங்கில மொழியின் ஊடுருவலைத் தாங்கி நிற்கும் ஆங்கிலத்தமிழ் இணைப்புக்கானது இந்தச் சொல். ஒருமுறை இச்சொல்லின்றி ஆங்கில வினைச்சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள் பெரும்பான்மையாக முடியாது. இதனால் இதை 'விசக்களை'என்று வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது.

தமிழில் ஆழமாய் வேரூன்றி விட்ட இச்சொல் களையப்பட்டால், ஆங்கிலத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் வலுவிழக்கும். ஆனால் எப்படி சாத்தியமாக்குவது என்றுதான் தெரியவில்லை.

கொசுறு: நான் இந்தப் பண்ணி எல்லாம் உச்சரிக்கமாட்டன் என்றால் பாருங்கோ. இந்தப் பதிவை றைட் பண்ணிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம். உடனே பிறண்டுக்குப் போன் பண்ணி இரண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். அப்புறம் அதை வைச்சு கரக்ட் பண்ணி றிவியூ பண்ணிட்டு இன்ரநெற்றை ஓப்பின் பண்ணினால், அது வேர்க் பண்ணவில்லை. மீண்டும் றை பண்ணி பேஜ்ஜை றீபிறஸ் பண்ணிட்டு, அப்புறமா ஆட்டிக்கல ரைப் பண்ணினேன். ஒரு வழியாக புளொக்கில் அப்லோட் பண்ணி தமிழிஸ் இல் சப்மிற் பண்ணப்போனால்................ ஐயோடா சாமி. ஆளைவிடுங்க, நாட்டில இந்தப் பண்ணித் தொல்லை தாங்க முடியலைடா.

அபிஷேகா

Monday, August 6, 2012

வன்னி மக்களின் பொருளாதார மேம்பாடும் பொருளாதார மீட்சியும்

வன்னிப் பெருநிலப்பரப்பில் 600 கோடி ரூபா முதலீட்டில் பாரிய விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திட்டமிடல் செயற்பாடுகள் மிகத்துரிதமாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வரவேற்கப்படவேண்டிய இத்திட்டம் அரசியல்வாதியான பசில் ராஐபக்ச தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.

அதேவேளை அரசியல் பலவீனத் தள நிலையிலிருக்கும் தமிழ்மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்ற கேள்வியை சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். ஏதோ ஒருவகையில் நிறைவேறப்போகின்ற இத்திட்டத்தை எவ்வாறு எம்மக்களுக்குச் சாதகமாக மாற்றுவது, அரசியல் ரீதியாக வரக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பிரதான விடயங்களில் உள்ளுர், புலம்பெயர் முதலீட்டார்களும் புலமைசார்வல்லுனர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பது வன்னி விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பு.

விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக சாத்தியகூற்று ஆய்வினை மேற்கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளின் குழு கடந்தவாரம் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. ஒரு துறைசார் திட்டமிடலுக்கான இக்குழு, நாட்டின் அரசியல் மற்றும் அதிகார உயர்மட்டங்களுடனான சந்திப்பினை மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றது. இச்செயற்பாடு, விவசாய மேம்பாட்டுதிட்டத்தில் அரசாங்கத்தின் அபிலாஷைகளே பிரதானமாக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவினையே தருவதாக அமைந்துள்ளது. ஏனெனில், ஏற்கனவே மகாவலித்திட்டத்தினூடாக வன்னியில் பாரிய சிங்களக்குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற இலங்கை அரசின் நீண்டநாள் கனவுக்கோவை மீளத் தூசுதட்டப்பட்டு, சர்வதேச உதவியுடன் புத்துயிர் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் மேலோங்கியிருப்பதையே இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

ஒரு நாட்டின் அதிகார வர்க்கம் என்பது அந்நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற, நிர்வகிக்கின்ற வலு (Power) கட்டமைப்பே தவிர அடிப்படைத்துறைக்கான அமைப்பு அன்று. ஒரு துறைக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, துறைசார் நிபுணர்களாலோ அதற்கென உருவாக்கப்பட்ட குழுவினாலோ முதலில் சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையில் தேவை மதிப்பீடு, திட்டமிடல், திட்டமதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையில் இறுதியாக அதிகாரபீடங்களின் பங்கு உள்வாங்கப்பட வேண்டும். மக்களுக்கான அபிவிருத்தியில் வகுக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிகாரவர்க்கத்தின் அனுமதி தேவையே தவிர, அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளுக்கு அமைவாகத் திட்டங்கள் வகுக்கப்படுவதில்லை. அது ஒரு மேம்பாட்டுத் திட்டமும் இல்லை. இங்கு வல்லுனர் குழுவால் தீட்டப்பட்டது இரண்டாவது வகை.

அதேவேளை திட்டமிடல் தொடர்பாக இரண்டு பிரதான கேள்விகள் எழுகின்றன. ஒன்று திட்டமிடலுக்காக வந்த இந்திய விஞ்ஞானிகள் குழுவின் சாத்தியவியல் ஆய்வுதொடர்பானதாகும். ஏனெனில் துறைசார் திட்டமிடலின் சாத்தியக்கூற்று ஆய்வு என்பது குறிப்பிட்ட பிரதேசத்தை மையப்படுத்தியதாக அமையும்போது, களநிலை ஆய்வு (Field Assessment) முதன்மைப்படுத்தப்படுகின்றது. குறைந்தது அப்பிரதேசத்தின் துறைசார் அறிவடையோர், நீண்டகாலம் அத்துறையில் பணியாற்றியவர்கள் தகவல் வழங்குபவராக உள்வாங்கப்பட வேண்டும். இதில் எந்தவொரு முறையும் இக்குழுவால் பின்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு விவசாய வலயமும் வெவ்வேறுபட்ட தன்மையைக்கொண்டது. பொதுப்படையான எடுகோள்கள் பொருத்தமற்றவை. அதேவேளை இலங்கை அரசினால் பேணப்பட்டு வரும் வன்னி மண்ணின் பெரும்பாலான புள்ளி விவரங்கள் இருபது ஆண்டுகளுக்கு முற்பட்டவை. எனவே சாத்திய ஆய்வுக்காக எவ்வாறான தகவல்கள், எவ்வாறு திரட்டப்பட்டன என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அடுத்து, ஒரு பிரதேசத்தினது அடிப்படைப' பொருளாதாரத் திட்டமிடலில், அப்பிரதேசத்தின் மக்களது பங்கேற்பு (participation) ஒரு முக்கியமான காரணியாக அமைகின்றது. இன்றைய உலகின் பொருண்மிய மேம்பாட்டுக்கான அடிப்படை உத்தியும் அதுவே. ஏனெனில் ஒரு பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவனுக்கே அப்பிரதேசத்தின் ஒவ்வோர் அணுவும் அதன் அமைப்பும் நன்கு தெரியும். பிரதேச அறிவு (Local Knowledge) என வரையறுக்கப்படும் இக்காரணியை உள்வாங்கிக் கொள்ளாத திட்டமிடல், வெற்றியின் சாத்தியங்களைக் குறைப்பதுடன் சிலசமயம் எதிர்மறையான விளைவுகளையும் கொடுக்கின்றது.

ஒரு சிறிய உதாரணம், 2005 ம் வருடம் ஒரு தொண்டு நிறுவனம் பூநகரியில் வேளாண் மேம்பாட்டுத்திட்டம் ஒன்றை மிகப்பெரியளவில் முன்னெடுத்தது. இத்திட்டம் முற்றுமுழுதாக வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட விவசாய விஞ்ஞானிகள், துறைசார் வல்லுனர்களினால் தயாரிக்கப்பட்டது. பரந்த வயல் வெளியில் பயிர்ச்செய்கை ஆரம்பமானது. அதற்காக வயல் வெளியை சுற்றியிருந்த பற்றைகள் பாரிய இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் - "அந்தப் பற்றைகளை அகற்ற வேண்டாம். இங்கிருக்கும் பற்றைகள் அகற்றப்பட்டால் இந்த தொடர் வயல் வெளியில் எவ்வித பயிர்செய்கையும் மேற்கொள்ள முடியாது” என வலியுறுத்தினார். ஆனால் வல்லுனர்களில் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளாததுடன் அவரின் வாதம் அர்த்தமற்றது எனவும் தெரிவித்தனர். மேலும் விஞ்ஞான ரீதியாக தமது திட்டம் பலமானது என வாதிட்டனர். இறுதியில் வல்லுனர்களின் திட்டப்படி எந்தப்பயிரும் அவ்விடத்தில் செய்ய முடியவில்லை. பயிர் முளைவிடும்போதே கருகியது. காரணம் அருகிலிருந்த நீரேரியில் இருந்து வந்த உப்புக்காற்றின் தாக்கமே. பற்றைகளால் சூழப்பட்டிருந்தபோது காற்று வருவது தடுக்கப்பட்டது என்பது பின்னர் வல்லுனர்களால் கண்டறியப்பட்டது. இதையே பெரியவர் தனது அனுபவத்தின் மூலம் கூறியிருந்தார்.

இதேபோல, காலம் காலமாக வன்னி மண்ணின் விவசாயத்தை வளர்த்துவரும் அந்த மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களின் எவ்விதமான பங்கேற்பும் இன்றி பிரதேசத்திற்கான திட்டம் தயாரிக்கப்படுகின்றது.

எனவே முறையான சாத்தியவியல் ஆய்வு இங்கு முதன்மைப்படுத்தப்படவில்லை. மாறாக வன்னியின் விவசாயத்தில் இந்திய முதலீட்டுக்கான சாத்திய ஆய்வே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் தொழில்நுட்பம், உபகரணங்கள், வேளாண் விதைகள், உரங்கள் இலங்கையால் கோரப்பட்டுள்ளன. இந்தியாவால் வழங்கப்படவுள்ள 600 கோடி ரூபா கடனில் ஒரு பகுதியாக இதனை (பொருட்களாக) வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தேவை மதிப்பீட்டு அடிப்படையில் கோரப்படவில்லை. இதிலிருந்து வன்னியின் விவசாயத்துறையில் இந்தியாவின் கேள்விச்சந்தை தேடப்படுவது தெளிவாகத் தெரிகின்றது.

பொருளாதார ரீதியாக நோக்குவோமாக இருந்தால் வன்னியின் விவசாய உற்பத்தியானது, வடபகுதியின் முழுக்கேள்வியையும் பூர்த்திசெய்யக்கூடியது மட்டுமல்லாமல் ஏற்றுமதியையும் செய்யக்கூடிய வளங்களைக்கொண்ட துறையாக விளங்குகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலத்தடிநீர் மாசுபாடு, நீருக்கான தட்டுப்பாடு மற்றும் விவசாயநிலங்கள் குடியிருப்பிடங்களாக மாற்றப்படுதல் போன்றவற்றால், உள்ளுர் விவசாய உற்பத்தி அம்மக்களின் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யமுடியாத நிலையிலுள்ளது. இச்சூழலில் யாழ்ப்பாணத்திற்கான கேள்விச்சந்தை வன்னி விவசாயத்திலேயே முழுமையாக சார்ந்திருக்கவேண்டியுள்ளது. இது வன்னி விவசாயசத்துறையின் கேள்விச்சந்தையினை மேலும் விஸ்தரிக்கக்கூடிய வாய்ப்புக்களை அதிகரிக்கின்றது. இப்புறநிலைகள் சிங்களக் கொள்கைவகுப்பாளரின் சிந்தனையை இங்கு மையங்கொள்ளச் செய்ததில் வியப்பில்லை.

இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருந்தபோதிலும் எந்த ஒரு காலகட்டத்திலும் வன்னியின் விவசாயத்துறையில் இலங்கை அரசினாலோ வேறு எந்த அபிவிருத்திப் பங்காளிகளினாலோ நெறிப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத்திட்டங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக சமாதானம் என்று சொல்லப்பட்ட காலப்பகுதியில் வன்னியின் விவசாயத்துறை மேம்பாட்டில் உலகவங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முறையாகக் கையாளப்படவில்லை. நவீன மயப்படுத்தப்பட்ட விவசாயமுறை நீண்டகால பொருளாதரத்தடையால் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அதேபோல் சமாதான காலத்தில் வன்னியின் விவசாயிகளை கதிகலங்க வைக்கக்கூடியளவில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் கேள்விச்சந்தைகள் தெற்கிலிருந்து குறிப்பாக தம்புல்ல போன்ற இடங்களிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டதையும், வன்னி விவசாயிகள் எதிர்கொள்ளமுடியாத போட்டிச்சந்தையை உருவாக்கி, வன்னியில் விவசாய மேம்பாட்டை தடுக்கின்ற அணுகுமுறை கையாளப்பட்டதையும் நினைவு கொள்ள வேண்டும்.

நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்டே வந்த வன்னிமக்கள், இறுதிப்போரின் இடப்பெயர்வினால் முழுமையாக எல்லாவற்றையும் இழந்துள்ளனர். மீள்கட்டுமானத் திட்டங்களில் இருந்து புறந்தள்ளப்படுகின்றனர். தற்போது கையேந்து நிலையிலிருக்கும் அவர்களை தூக்கிவிடும் பாரிய கடமை தமிழ் முதலீட்டாளர்களிடமும் புலம்பெயர் சமூகத்திடமும் உள்ளது.

இப்படிப்பட்ட புறநிலைகளில், செயற்படப்போகும் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களை எமது மக்களுக்குச் சாதகமாக்கக்கூடிய சில வழிகள்

Ø உற்பத்தி, உற்பத்தியின் பின்னரான முதலீடு, சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப உட்கட்டுமானம் போன்றன இங்கிருக்கும் முதலீட்டுக்கான வாய்ப்புகள். இதில் உள்ளுர் மற்றும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் முதலிடவேண்டும்.

Ø திட்டமிடலில் உள்ளுர், புலம்பெயர் வல்லுனர்கள் ஏதோ ஒரு வழியில் திட்டம் சரியான முறையில் செல்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து ஆலோனைகளை வழங்க வேண்டும்.

Ø முக்கியமாக வடபகுதி தமிழ்மக்கள் நகர்ப்புறம் சார்ந்து குடியேறும் நிலையை தவிர்த்து, ஒரு நெரிசல் மிக்க வாழ்க்கை முறையிலிருந்து மாறி வன்னிப்பகுதியில் குடியேறலாம். இதன்மூலம் சிறந்த தொழில்வாய்ப்பைப் பெறுவதுடன் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்த முடியும் என்பதற்கு அப்பால், எமது பூர்வீக தாயக நிலம் பறிபோவதைக் காப்பாற்றலாம். இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மக்களை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களுக்கான ஒழுங்குகளையும் செய்வதால் பாரிய சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதுடன் நீண்ட போரின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்தலாம்.

Ø புலம்பெயர் மக்கள் தங்களுக்குத் தெரிந்தவர், உறவினர் மூலமோ அல்லது ஒருகுழுவாக சேர்ந்தோ தங்களால் இயன்ற உற்பத்தி முதலீட்டை நேரடியாக வழங்க முன்வந்தால் சிங்களத்திடம் கையேந்தாமல் விரைவாக தங்குநிலையிலிருந்து தனித்துவமான பொருளாதார நிலைக்கு எமது சமூகம் கௌரவமாக செல்லக்கூடிய வாய்ப்புள்ளது.

அபிஷேகா

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. சிங்களதேசம் வெற்றிவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. படையதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பதவியுயர்வும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. வன்னிப்பகுதியின் ஒவ்வொரு பிரதேசமும் கைப்பற்றப்படும் போது சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு; தமிழர் பிரதேசங்களை கைப்பற்றுவதாக கூறியது. எனவே சிங்கள தேசம் வெளிப்படையாக தமிழர்களை வென்றதாக கூறி நடத்தும் வெற்றிவிழாக்களும் நிகழ்வுகளும், சிங்களம் கூறியது போல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றி என்பதற்கு மாறாக தமிழீழம் என்ற ஒரு நாட்டின் பகுதிகளை கைப்பற்றி நிகழ்த்தப்பட்ட வெற்றிக்கூத்தாட்டங்களகவே கருதவேண்டியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ தனியரசு இருந்ததை மீண்டுமெருமுறை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கைத்தீவில், தமிழ்மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைகளிற்குள்ளும் வன்னியிலிருந்த மக்கள் சிறையகதிமுகாம்களுக்குள்ளும் அடைக்கப்பட்டுள்ளார்கள். மிகமோசமாக, கிட்லரின் முறையில் அம்மக்கள் நடத்தப்படுகின்றார்கள். இலங்கை தீபகற்பத்தில், தமிழனுக்கு எந்தவிடத்திலும் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத அச்சமான சூழ்நலையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளால் கூட அகதிமுகாமில் வாழும் மக்களின் துயரத்தை நீக்கமுடியாதநிலை அவர்களின் கையாலாகத்தனத்தை காட்டுகின்றது. இவ்வாறு பல இன்னல்களுக்குள் தமிழ்மக்கள் சிக்கத்தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல ஊடகங்கள் தமிழ்மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு முனைப்பாக கொண்டு சென்றுகொண்டிருந்தாலும் சில ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளின் பின்னடைவை விமர்சிப்பது தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

அது மட்டுமில்லாது 30 வருடங்களிற்கு மேலாக மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் போராடி 25000 க்கும் மேற்பட்ட போராளிகளை அர்ப்பணித்து தமிழர்களுக்கான அடையாளத்தை, பாதுகாப்பை, போரிடும் ஆற்றலை, நம்பிக்கையை, சுதந்திர போராட்ட தந்திரோபாயங்களை மக்களின் மனங்களில் விதைத்து, தமிழ்மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் தேசத்தலைவனையும் அவன் சார்ந்து வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் விமர்சிக்கும் சிலரின் சுடலை நியாயம் போன்ற கருத்துவாதங்கள் வேதனையையும் எரிச்சலையும் தருகின்றன.

சிங்களப்படையின் போர் வெற்றியென்பது தனியே சிங்களப்படைகளின் வெற்றியல்ல 20 மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆலோசனை, ஆயுத உதவி, போர் வீரர்கள் உதவி, தொழில்நுட்ப உதவி, செய்மதித் தகவல்கள் போன்று பல்வேறு வகையான உதவிகளையும் பெற்றே சிங்களப்படை போரிட்டது மாறாக தலைவர் தனியொருவராக தமிழ்மக்களின் உதவியுடன் போராளிப்படையை வழிநடத்தி போரிட்டார், எனவே இப்பிரதேச இழப்பு என்பது தமிழர் படை சிங்களப்படையிடம் தோற்றதாக கருதமுடியாது மாறாக பலநாடுகளால் வலுவுட்டப்பட்ட, குறிப்பாக படைவீரர்களின் உதவியைப் பெற்றே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தை கைப்பற்ற முடிந்ததே தவிர விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கவுமில்லை அழிக்கவும் முடியாது. இது உலகறிந்ததே. தற்போது புலிகள் ஆயுதங்களை மௌனித்திருக்கின்றார்களே தவிர ஆயுதப்போராட்டத்தை கைவிடவில்லை.

14 வயதில் தனது போராட்டத்தை தொடங்கி பல இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் போராட்டத்தை கொண்டு நடத்திய தலைவன் 3 தசாப்தகால போராட்டத்தில், உலக அரசியல் அதன் போக்கு அதாவது உலக அரசியல் என்பது உலகநாடுகளின் நலன் சார்ந்த அரசியலா? அல்லது நடுநிலையான அரசியலா? தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தில் இந்த சர்வதேசம் எவ்வளவு தூரம் இதயசுத்தியோடு செயற்படும்? என்பதை புரியாமல் உலகம் பாராட்டிய பாரிய விடுதலைப்போராட்டத்தை நடத்தியிருப்பார் என்ற கருத்துவாதத்தை எவ்வாறு வைக்கமுடியும்? இந்த சர்வதேச அரசியல் எப்போதாவது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது, அவர்கள் அரச பயங்கரவாதத்ததால் துன்புறுத்தப்படும்போது, தமிழ்மக்கள் தீர்வு தொடர்பான கரிசனையுடன் செயற்பட்டதா? 2000ம் ஆண்டு யாழ்குடாநாட்டை கைப்பற்றிக் கொண்டு விடுதலைப்புலிகள் இராணுவ நகர்வை செய்தபோது இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி சிங்கள இராணுவத்தை காப்பாற்றியது.

பின்னர் 2002 வரை புலிகளின் கடுமையான போரை எதிர்கொள்ளமுடியாமல் சிங்களம் சிக்கித்தவித்த போது சர்வதேசம் தலையிட்டு விடுதலைப்புலிகளின் இராணுவச்சமநிலை எற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை கொண்டு வந்து சிங்களத்தை காப்பாற்றியது. எனவே சர்வதேச சமூகம் என்பது உரிமைக்காக போராடும் இனங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும். அதை நம்பி செயற்பட்டு ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வைக்கலாம் என்று யாராவது தலைவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாமா? அப்படியாயின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினடிப்படையிலான உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை சர்வதேச சமூகம் சரியாக வழிநடத்தியதா? எந்த அரசியல் தீர்வுகளிலும் தொடர்புபடாத சுனாமி பொதுக்கட்டமைப்பு செயலிழக்கம் செய்யப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி ஒரு அனர்த்த நிவாரண உடன்படிக்கையை கூட செயற்படுத்தமுடியாத சர்வதேச வல்லரசுச் சக்திகளின, கேந்திர நலன்களை சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றங்களை செய்யவேண்டும் என்பது எந்த வகையில் பொருந்தும்??

நடுநிலை, மனிதாபிமானம் என்பவற்றுக்கு அப்பால் பொருளாதார நலன் கொண்டு சிந்திக்கும் சர்வதேசம், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தரும் என்ற கருத்தை தலைவருக்கு எவ்வாறு கூறமுடியும்? அப்படி கூறுபவர் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை தலைவருக்கு கூறுவார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழ்மக்களிற்கு சர்வதேச சமூகம் எந்த வகையில் தீர்வை பெற்றுத்தரப்போகின்றது?.

உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக வழிமுறையில் தமிழின உரிமைகளுக்காகவும் படுகொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடாத்தி;கொண்டிருக்கின்ற போதும் சர்வதேச கண்காணிப்பாளர்களையோ இமனிதாபிமான அமைப்புகளையோ, சர்வதேச தொண்டர் நிறுவனங்களையோ அனுப்பி அம்மக்களை பாதுகாக்க முடியாத சர்வதேச சமூகம், நடந்தேறிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய கூட முடியாதிருக்கும் இந்த சர்வதேச சமூகம், வாக்குறுதிகளின் நம்பிக்கையோடு சரணடைய வந்த வடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரைக் கூட காப்பாற்ற முடியாத இந்த சர்வதேச சமூகத்தை நம்பி செயற்பட்டிருக்கலாம் என்ற வாதம் எந்த நம்பிக்கையையும் தரவில்லையே! எனவே புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பாக சரியான கருத்தை தெரிவிக்கவில்லை என்று சொல்வது தேசத்திற்காக ஒய்வின்றி போராடிய அந்த மாவீரனை கொச்சைப்படுத்துவது போன்று தோற்றமளிக்கவில்லையா?

சீன பெருந்தலைவர் சொன்னது போல துப்பாக்கி முனையிலிருந்தே அரசியல் பிறக்கின்றது. அகிம்சை போராட்டம் பயனற்று போனபோது, உருவாக்கம் பெற்ற விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை முழுஉலகிற்கு முழுஅளவில் கொண்டு செல்லப்பட்டு, அதனுடாக சர்வதேச அளவில் அரசியல் தளமும் தெளிவாக உருவாக்கப்பட்டது. அப்படி சரியாக உருவாக்கப்பட்டதால்தான் பெரும்பான்மை புலம் பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே தலைவன், ஒரு கொடி, ஒரே இயக்கம் என்று இணைந்து செயற்படுகின்றார்கள். ஒரு உறுதியான அரசியல் தளத்தை போடவில்லை என்று கூறுவதில் சரியான அரசியல் தத்துவமாகத் தெரியவில்லை.

அதுமட்டுமில்லாது ஒரு நடைமுறை அரசைக் கட்டிவளர்த்ததினூடாக இராணுவ, அரசியல், நிர்வாக அடித்தளங்கள் மிகச்சீராகக் கட்டமைக்கப்பட்டு நடைபெற்றுவந்ததை தமிழ்மக்களும் உலகமும் அறியும். அதுமட்டுமன்றி, சுனாமியின் பின்னரான ஒழுங்குபடுத்தலினூடாக முழு நிர்வாக திறனையும உலகமே பாராட்டியதன் பின்னரும் தலைவர் இராணுவகட்டமைப்பை மட்டுமே கட்டிவளர்த்தார் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று.

உறுதியான அரசியல் சித்தாந்தம் இல்லாமல் முப்பது வருடமாக இராணுவ இயந்திரம் மட்டுமே கட்டி வளர்க்கப்பட்டது என்பது, ஒரு நோக்கமற்ற இராணுவத்தை கட்டமைத்தது என்ற கருதப்படுவது சாலச்சிறந்ததல்ல. ஏனெனில், அரசியல் விடுதலையை வென்றெடுக்க அகிம்சையை கையிலெடுத்து போராடி, தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அரசியல் யதார்த்த புரிதலின் அடித்தளத்திலேயே இராணுவ இயந்திரம் கட்டிவளர்க்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறி தேர்தலில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தார்கள் என்பது யாவரும் அறிந்தது.

அரசியல் ரீதியாக அது தோற்றுப் போன போது, அந்த அரசியல் அடித்தளத்தில் தமிழீழத்தை அடைய ஆயுதப்போரட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினர். தலைவர் மட்டுமே சரியான, கட்டுப்பாடான, நேர்மையான, எதற்கும் விலைபோகாத பேரியக்கத்தை கட்டி வழிநடத்தினார். எனவே சரியான அரசியல் அடித்தளத்திலேயே இராணுவ கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆயுத வலிமைத் தளர்வு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டவுடனேயே, சிங்களம் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 13வது சீர்திருத்தத்தினடிப்படையில் முக்கிய சரத்துக்களை உள்ளடக்காத ஒரு அரைகுறை தீர்வை கொண்டுவர முனைவதிலும், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்று பிராந்திய வல்லரசு தெரிவிப்பதிலும, 2002ம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தன்னாட்சி, தாயகம், சுயநிர்ணய அடிப்படையில் பேசலாம் என்ற சர்வதேச சமூகம், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்ற தொனியில் பேசுகின்ற இந்த நிலைமாற்றத்திலும் பிரதான பங்கு வகிப்பது அரசியல்தளமல்ல இராணுவ தளமே என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த புறநிலையை சரியாக ஊகித்தே தலைவர் செயற்பட்டார்.

தமிழ்மக்கள் இப்போதுள்ள புதியசூழலில் தெளிவாக புரிந்த கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. குறிப்பாக சகல அரசியல் புறச்சூழல்களையும் எதிர்கொண்டு அரசியல்இ ராசதந்திர, இராணுவ உத்திகளை வகுத்து சிறந்த தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் போராளிகளையும் உருவாக்கி தமிழருக்கு நம்பிக்கையையும் வீரத்தையும் மெருகேற்றி, உலகத்தில் தமிழனின் போராட்ட நியாயத்தை அரசியல் ரீதியாக நகர்த்திய தலைவரை வஞ்சப்புகழ்ச்சி செய்து, தலைவரையும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும். சிறையகதிமுகாம்களில் துன்புறும் மக்களின் பாதுகாப்பு, சர்வதேச மனிதாபிமான உதவிகளும் நேரடியாக சென்றடைவதற்காக வழிவகைகளையும் காணாமல்போவோர், கைதுசெய்யப்படுவோர், ஏனைய வழிகளில் பாதிக்கப்படுவோர், அடிப்படைவசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் காப்பற்றப்படக்கூடிய வழிவகைகளை கண்டறிந்து அந்தந்த நாடுகளிலிருக்கும் புலம்பெயர்மக்கள் அங்கு பிரச்சாரங்களையும் சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுப்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகின்றது. முக்கியமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படலாம் ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் வரை புலிகளின் இராணுவ பலம் பாதுகாக்கப்பட்டு இருப்பதே தமிழினத்திற்கு என்றும் பாதுகாப்பானது என்பதை யாரும் மறந்து செயற்படக்கூடாது.

அபிஷேகா